பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

452
petrol-price

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால், விலை உயர்வு தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாயை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விலை உயர்வை கட்டுப்படுத்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு விலையை குறைக்க முடியாது என்று கைவிரித்துவிட்டது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பூஜா மகாஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் மத்திய அரசின் மறைமுக உத்தரவின்பேரில் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலின்போது 22 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே பெட்ரோல், டீசல் விலையை நியாயமாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளார். இந்த பொதுநல மனு இன்று விசாரணைக்கு வருகிறது