“ஊரடங்கு உத்தரவை மீறுவோரை சுட்டுத்தள்ளு” – பிலிப்பைன்ஸ் அதிபர் அதிரடி..!

624

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுவோரை தேவைப்பட்டால் சுட்டுக்கொல்ல பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நோயின் தீவிரத்தை உணராமல் வெளியில் சுற்றுவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே எச்சரித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டுட்டர்டே, ‘ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம். ஊரடங்கு உத்தரவை மீறி, சுகாதார பணியாளர்கள், டாக்டர்களுக்கு இடையூறு செய்வது மிகப்பெரிய குற்றம் ஆகும். காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு எனது உத்தரவு… ஊரடங்கை மீறுவோர்களால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட்டாலோ, உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ, அவர்களை சுட்டுக் கொல்லுங்கள்’ என பேசினார்.

மணிலாவின் குயிசான் நகரைச் சேர்ந்த குடிசைப்பகுதி மக்கள் தங்களுக்கு அதியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை எனக் கூறி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திய நிலையில், அதிபர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் 2,311 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of