இங்கு காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணி – கேரளத்தில் போட்டாப்போட்டி – ராகுலிடம் பாயும் பினராயி விஜயன்

519

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியுடன் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதனால், கேரளாவில் ஆட்சி நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோபம் அடைந்துள்ளது.

இந்த இரு கட்சிகளுக்கும் மோதல் உருவாகி உள்ளது.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முதல்-மந்திரியுமான பினராயி விஜயன் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் கேரளாவில் போட்டியிடுவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது இல்லை. காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களில் அவரும் ஒருவர்.

பா.ஜனதாவுடன்தான் காங்கிரசுக்கு போட்டி என்றால், பா.ஜனதாவுடன்தான் ராகுல் காந்தி மோதி இருக்க வேண்டும். கேரளாவில், இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி.

எனவே, ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதை இடதுசாரிகளுக்கு எதிரான போட்டியாகவே பார்க்க வேண்டும். ஆனால், எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

ராகுல் காந்தியை தோற்கடிக்க பாடுபடுவோம்.தேர்தலுக்கு பிறகு, அமேதி தொகுதியை தக்க வைத்துக்கொள்வேன் என்று ராகுல் காந்தி ஏற்கனவே கூறியுள்ளார். அப்படியானால், வயநாட்டில் இடதுசாரிகளை தோற்கடிக்க முடியுமா என்று அவர் சோதித்து பார்க்கிறாரா? மக்களுக்கு இதன் மூலம் என்ன சொல்ல வருகிறது, காங்கிரஸ்?

தேர்தலுக்கு பிறகு காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது பற்றி தேர்தலுக்கு பிறகுதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத்தும் இதே கருத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

கேரளாவில், பா.ஜனதாவை எதிர்த்து போராடும் முக்கிய சக்தியாக இடதுசாரி கட்சிகள் திகழ்கின்றன. கேரளாவில், ராகுல் காந்தியை நிறுத்துவதன் மூலம், இடதுசாரிகளுடன் மோத காங்கிரஸ் விரும்புவதாக தெரிகிறது. இந்த மோதலுக்குத்தான் அக்கட்சி முன்னுரிமை கொடுப்பதாக தெரிகிறது.

இதன்மூலம், பா.ஜனதாவுடன் மோதும் தேசிய கடமையில் இருந்து காங்கிரஸ் விலகி விட்டது. இருப்பினும், வயநாட்டில் ராகுல் காந்தியை வீழ்த்த இடதுசாரி கூட்டணி பணியாற்றும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement