ஓய்வு பெற்ற இலங்கை அகதிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறதா?

760

நீலகிரி தேயிலை தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இலங்கை அகதிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டுக்கு முன் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தேயிலை கழகத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தியா – இலங்கை இடையிலான ஒப்பந்தப்படி அகதிகளாக வந்தவர்களுக்கு வேலைவாய்ப்பும், தங்குவதற்கு இடமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. ஆனால் தேயிலை கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றாலோ அல்லது பணியில் இருந்து விலகினாலோ அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவதால், அவர்களுக்கு நிரந்தர வீட்டு வசதி ஏற்படுத்தி தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 2ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள், வீடுகள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அண்மையில் தமிழக அரசு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஆயிரம் பேருக்கு வீடு கட்டி கொடுக்க முன்வந்துள்ள நிலையில், மீதமுள்ள ஆயிரத்து 500 பேருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? அல்லது அது தொடர்பான அரசாணை ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement