கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறி இந்த பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, நாளை முதல் தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாற்றாக வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தலாம் என அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில் பிளாஸ்டிக் தடை உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருவதால், பிளாஸ்டிக் பொருட்களை இன்று மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் மண்டல மற்றும் வார்டு வாரியாக சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கும். முதற்கட்டமாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் இருந்து அதிக அளவில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.