மோடிக்கு பூமியின் சாம்பியன் விருது – ஐ.நா. வழங்கியது

1252

பிரதமர் மோடிக்கு பூமியின் சாம்பியன் என்ற விருதினை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் வழங்கி கவுரவித்தனர்.

சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபடுவர்களை ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ‘UNEP Champions of the Earth’ என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு உலகின் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்ட 6 பேரை ஐ.நா. சபை தேர்வு செய்தது.

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு தலைமை ஏற்று வழி நடத்துவதற்காகவும், இந்தியாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதற்காகவும் பிரதமர் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ், பிரதமர் மோடிக்கு ‘UNEP Champions of the Earth’ விருதினை வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டணி அமைப்பின் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 2030ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் மின்சார தேவையில் 40 சதவீதத்தை சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 200 ஆண்டுகளாக, பூமிக்கு அடியில் கிடைக்கும் நிலக்கரி போன்ற பொருட்களைத்தான் மின்சார தேவைக்காக பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், பூமியின் நலனுக்காக அதிலிருந்து மாற வேண்டிய காட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Advertisement