இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பதவி விலகினார்!

442

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கை தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மை மக்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக ஓட்டுபோட்டனர். அதன்படி 2019 மார்ச் 29-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் பிரெக்ஸிட்டை எதிர்த்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியதை தொடர்ந்து தெரசா மே புதிய பிரதமராக பொறுப்பு ஏற்றார். உடனடியாக அவர் பிரெக்ஸிட்டுக்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த தொடங்கினார்.

பிரெக்ஸிட்டுக்கு பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வர்த்தகம், வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு உடன் தெரசா மே ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறி இங்கிலாந்து எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சியான தொழிற்கட்சியில் மட்டுமல்லாது தெரசா மேயின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இதன் காரணமாக ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து தெரசா மேவின் கோரிக்கையின் பேரில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

ஆனாலும் பிரெக்ஸிட் விவகாரத்தில் எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் பதவியையும், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யப்போவதாக தெரசா மே கடந்த மாத இறுதியில் அறிவித்தார்.

ஜூன் 7-ந் தேதி முறைப்படி பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

எனினும் புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரையில் பொறுப்பு பிரதமராக தொடர்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் அடுத்த பிரதமர் ஆவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பதவியை ஏற்பதில் மேலும் 10 எம்.பி.க்கள் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.

அடுத்த மாத இறுதிக்குள் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 10-ந் தேதியுடன் முடிவடைகிறது.

புதிய பிரதமராக பதவி ஏற்கும் நபர் சில மாதங்களுக்குள்ளாகவே தெரசா மேவின் திட்டத்தின்படி பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் பிரெக்ஸிட்டை மேலும் தாமதப்படுத்துவது அல்லது ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.