நீரவ் மோடியின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

592

வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கி உள்ள மோசடி பேர்வழி வைர வியாபாரி நீரவ் மோடிக்குசொந்தமான 637 கோடி ரூபாய் மதிப்பிலான
சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினரும் கீதாஞ்சலி நகை நிறுவன அதிபருமான மெஹூல் சோக்ஸியும் சேர்ந்து பஞ்சாப்
நேஷனல் வங்கியிடம் உத்தரவாத கடிதம் பெற்று, 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத மோசடி செய்தது தொடர்பாக, அவர்கள் மீது சி.பி.ஐ.,
அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி பேர்வழி நீரவ் மோடியும் அவரது உறவினர்
மெஹூல் சோக்ஸியும் குடும்பத்துடன் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய நீரவ் மோடியை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கையை
மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே நீரவ் மோடி மற்றும் அவருக்குச் சொந்தமான நகைக்கடைகளின் சொத்துக்களை முடக்கவும், பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து 5 ஆயிரத்து 714 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் உட்பட வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் உள்ள நிரவ் மோடியின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நீரவ் மோடிக்குசொந்தமான 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.

Advertisement