தமிழில் தேர்வெழுத அனுமதிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி

403
nellai

தமிழில் தேர்வெழுத அனுமதிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி அடக்குமுறையை கையாண்டுள்ளனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகை பதிவேடு 70 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் மாணவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது.

இதனை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவர்களை கலைக்க முற்பட்ட போது, மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து, மாணவர் சங்க பிரதிநிதிகளிடம், பல்கலைக்கழக துணை வேந்தர் 3 மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. பின்னர், மாணவர்கள் அத்துமீறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்றதால், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால், மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால், அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. மேலும், போராட்டத்தை வழிநடத்தியதாக 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.