“நான் சிறையில் தாக்கப்பட்டேன்” – முகிலன் பரபரப்பு புகார்..!

835

கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர், தான் சிறையில் தாக்கப்பட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முகிலன் (வயது 52). கடந்த பிப்ரவரி மாதம் சென்னையிலிருந்து ரெயிலில் புறப்பட்ட இவர் திடீரென மாயமானார். அதன்பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்டார்.

இதற்கிடையே முகிலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி அவருடன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட பெண் ஒருவர் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகார் தொடர்பான வழக்கு, கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் காணாமல் போய் கண்டு பிடிக்கப்பட்ட முகிலனை கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கற்பழிப்பு வழக்கில் கைது செய்து கடந்த 9-ந்தேதி நள்ளிரவில் கரூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது 24-ந்தேதி (நாளை) வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே முகிலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார், இதுகுறித்து கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 1-ல் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு மீதான விசாரணை நேற்று கோர்ட்டில் நடந்தது. இதையொட்டி திருச்சி மத்திய சிறையிலிருந்து போலீசார், வேனில் கரூர் கோர்ட்டுக்கு நேற்று மதியம் முகிலனை அழைத்து வந்தனர். அப்போது வேனில் இருந்து கீழே இறங்கிய அவர், போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

அதன் பின்னர் நீதிபதி விஜய்கார்த்திக் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது முகிலன், சிறையில் தான் தாக்கப்பட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். மேலும் எனது வக்கீலிடம் கலந்து ஆலோசிக்க அனுமதி கொடுக்காமலேயே காவலில் எடுக்க கொண்டு வந்து விட்டனர் என்று நீதிபதியிடம் கூறினார்.

பின்னர் அது பற்றிய விவரங்களை எழுத்துப்பூர்வமாக எழுதி தருமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில், கோர்ட்டிலேயே அது தொடர்பாக மனுக்கள் எழுதி நீதிபதியிடம் முகிலன் சமர்ப்பித்தார்.

அதனை தொடர்ந்து முகிலனை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான வழக்கினை நாளை (அதாவது இன்று) ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாலையில் கோர்ட்டிலிருந்து முகிலனை போலீசார் வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.