தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

2487

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக, 1994-ல் இருந்து ஆண்டுதோறும், ஜனவரி, மார்ச் மாதங்களில் இரண்டு தவணையாக ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் இந்தியாவில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய அளவிலான போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெறுகிறது.

தமிழகத்தில், 71 லட்சம் குழந்தைகளுக்கும் சென்னையில் 7 லட்சம் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என 43 ஆயிரம் முகாம்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Advertisement