அரசியல்வாதி கொலை காரணம் மரவள்ளிக்கிழங்கு ?

180
KERELA4.3.19

கடந்த சில காலமாக கேரளாவில் அரசியல் கட்சிகளிக்கிடையே சண்டை ஏற்படுவதும், அதன் காரணமாக அரசியல்வாதிகள் கொலைசெய்யப்படுவதும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவில் உள்ள சிதறா பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக பஷீர் என்பர் பணியாற்றி வந்தார். நேற்று மாலை பஷீர் அந்த பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷாஜகான் என்பவர் அங்கு வந்தார்.

தனக்கு மரவள்ளிக் கிழங்கு தரும்படி பஷீரிடம் ஷாஜகான் கேட்டுள்ளார். ஆனால் பஷீர் கொடுக்காததால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு ஷாஜகான் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இரவு பஷீர் தனது வீட்டில் இருந்த போது அங்கு வந்த ஷாஜகான் அவரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். தகராறு முற்றியதில் ஷாஜகான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பஷீரை சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பஷீரை கொல்லம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த கொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, அரசியல் ரீதியான காரணத்திற்காகவே பஷீர் கொலை செய்யப்பட்டு உள்ளார். இது கண்டனத்திற்கு உரியது. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

அதேசமயம் காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா இதை மறுத்து உள்ளார். பஷீர் கொலை அரசியல் காரணங்களுக்காக நடந்தது அல்ல. அவரது உறவினர்களே இந்த கொலையில் அரசியல் இல்லை என்று கூறி உள்ளனர். ஆனால் தேவை இல்லாமல் இதை அரசியல் ஆக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முயற்சி செய்து வருகிறது என்றார்.