பொள்ளாச்சி விவகாரம் – கனிமொழி தலைமையில் போராட்டம்

493

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக் கோரி தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் கைதான பார் நாகராஜ் உள்பட 4 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது.


இதைத்தொடர்ந்து இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக் கோரி தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் திமுக வின் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் தடையை மீறி போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.