ஜன் தன் யோஜனா திட்டத்தை நீட்டிக்கவும், ஊக்கப்படுத்தவும் புதிய சலுகைகள்

1414

ஜன் தன் யோஜனா திட்டத்தை காலவரையின்றி நீட்டிக்கவும், திட்டத்தை ஊக்கப்படுத்த புதிய சலுகைகள் வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜன் தன் யோஜனா திட்டம், கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. சாதாரண மக்களுக்கும் வங்கி கணக்கு, காப்பீடு, ஓய்வூதியம் போன்ற நிதி சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த திட்டம் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜன் தன் யோஜனா திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் 32 கோடியே 41 லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வங்கி கணக்கிகளில் 81 ஆயிரத்து 200 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். கணக்கு வைத்திருப்பவர்களில் 53 சதவீதம் பேர் பெண்கள் என்றும், 83 சதவீத கணக்குகள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த திட்டத்தை காலவரையின்றி நீட்டிக்க முடிவு செய்துள்ளதாகவும், வங்கி கணக்கு தொடங்குவதை ஊக்கப்படுத்துவதற்காக, கூடுதல் சலுகைகள் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

Advertisement