பிரேமலதா சந்திரமுகி போல பேசுகிறார் – டிடிவி தினகரன் சாடல்

735

பிரேமலதா சந்திரமுகி போல பேசுகிறார் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக கணபதி போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (ஏப்ரல் 13) உளுந்தூர்பேட்டை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய தினகரன், “டிடிவி தினகரன் கட்சிக்கு வாக்களித்தால் ராகுல் காந்தி பிரதமராகாமல் மீண்டும் மோடி பிரதமராகிவிடுவார் என பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.

2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்ததும் கறுப்புப் பணத்தை மீட்டுவந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று உறுதியளித்தார். 15 பைசா கூட வரவில்லை.

இளைஞர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் மோடி உறுதியளித்தார். அதுவும் நடக்கவில்லை. ஜிஎஸ்டியை கொண்டுவந்து நமது வணிகர்களின் வியாபாரத்தை முடக்கியதுதான் மிச்சம்.

பணமதிப்பழிப்பு எனக் கூறி நமது பணத்தை அழித்துவிட்டு அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் உதவி செய்துவிட்டார். இதனால் மற்ற மாநிலங்களில் ஏமாந்த மக்கள் மிகக் கோபமாக இருக்கின்றனர். இதனால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

தேசிய கட்சிகள் மாநில உரிமைகளைப் பறிப்பார்கள் என்றுதான் மக்கள் அம்மாவுக்கு வாக்களித்தனர். நீட் தேர்வு ஒழிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்; ரத்து செய்யப்படாது என பியூஷ் கோயல் கூறுகிறார்.

டாக்டர் ராமதாஸ் முன்பெல்லாம் தைரியமாக இருப்பார். ஆனால், இப்போது அவரின் முகத்தைப் பாருங்கள். மோடியின் மிரட்டலால்தான் கூட்டணியில் ராமதாஸ் சேர்ந்தார்.

மெடிக்கல் காலேஜ் வழக்கில் சிறையில் தள்ளிவிடுவோம் என மோடி மிரட்டியதால் கூட்டணியில் சேர்ந்துவிட்டார்கள்.

நாம் இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுவதில்லை. பிரேமலதா சந்திரமுகி போல பேசுகிறார்.

முன்பெல்லாம், அம்மாவைப் பற்றி மோசமாகப் பேசிய பிரேமலதா, தற்போது புரட்சித் தலைவி என்று அழைக்கிறார்.

அரசியல்வாதிகள் யாராவது மதத்தைப் பற்றியோ, சாதியைப் பற்றியோ பேசினால் யோசித்து வாக்களியுங்கள். எங்கள் வேட்பாளர்கள் பேசினாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று பேசினார்.

Advertisement