தேவைப்படும் போது முழுவலிமையும் பயன்படுத்த தயங்க மாட்டோம்.., ராம் நாத் கோவிந்த் ஆவேசம்

187

தமிழகத்தில் நடைபெற உள்ள பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் பிற்பகல் கோவையை வந்தடைந்தார். விமான நிலையித்தில் இவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், எஸ்.பி வேலுமணி, டிஜிபி ராஜேந்திரன், கலெக்டர் ராஜாமணி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கார் மூலம் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு 3.50 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு தங்கிய அவர் மாலை 6 மணி முதல் 7 மணி வரை முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து ஜனாதிபதி இரவில் தங்கினார்.

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போர் காலங்களிலும், அமைதி நிலவும் காலங்களிலும் முக்கிய பங்காற்றி சிறப்பாக செயல்படும் விமானப் படை பிரிவுகளுக்கு “பிரசிடெண்ட் கலர்ஸ்” என்ற உயரிய விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அவருக்கு 583 விமானப் படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர். இந்திய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வீரர்கள் அணிவகுப்பை வாகனத்தில் சென்ற படி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து ஆகாஷ் கங்கா அணி நிகழ்த்திய பாராகிளைடிங் சாகசம் நடைபெற்றது. போர் விமானங்களின் சாகசமும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும்போது,

தீவிரவாதிகளின் முகாமை அழித்த தாக்குதலில் விமானப் படை தீரத்துடன் சிறப்பாக செயல்பட்டது. பேரிடர் காலங்களில் விமானப்படையின் பணி மகத்தானது. அமைதியை விரும்பும் இந்தியா, தேவைப்படும் போது முழுவலிமையையும் பயன்படுத்த தயங்காது என கூறினார்.