பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து

  477

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் ஆளுநர், பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  பிரதமர் நரேந்திர மோடி:

  தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும், கொண்டுவர பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். தேசத்திற்கு உணவளிக்க உழைக்கும் விவசாயிகளுக்கு வணக்கம் செலுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:

  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், தனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். பொங்கல் திருநாளில், தமிழர்களின் வாழ்வில் நலமும்- வளமும் பெருகி, அமைதியும்- இன்பமும் நிலைக்கட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், எத்தனையோ விழாக்கள் உண்டு என்றும், அவை மதத்துக்கு மதம், சாதிக்கு சாதி, ஊருக்கு ஊர் வேறுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் இருக்கும் ஒரே விழா சமத்துவ பொங்கல் விழா என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும், தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்கால நிலத்தில், நல்லாட்சி விளையட்டும், அதற்கான விவசாயம், இந்நாளில் தொடங்கட்டும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

  பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

  பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், உழவர் திருநாளான பொங்கல் பெருவிழாவையும், தமிழ் புத்தாண்டையும் உற்சாகத்துடன் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சொந்தங்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும், துயரங்களுக்கும் தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் நாளாக இந்த ஆண்டு தைத்திருநாள் அமையட்டும் என கூறியுள்ளார். அதற்காக கடுமையாக உழைக்க அனைவரும் இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என்றும் ராமதாஸ் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர் காலம் காலமாகக் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு அடையாளமாக இதோ பொங்கல் நாள் புத்துயிர்ப்புடன் புலர்வதாக குறிப்பிட்டுள்ளார். மக்கட் செல்வங்களோடு குதூகலித்துக் கொண்டாடும் இன்பத் திருநாள், தை பொங்கல் என்பதால் தாய்த் தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கும், தரணிவாழ் தமிழர்களுக்கும், குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும் தன் இதயம் நிறைந்த இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

  அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி:

  அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் தனது இதயம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், பல இன்னல்களை தாங்கிக்கொண்டு நாம் பசியாற தொடர்ந்து உணவளிக்கும் விவசாய பெருமக்களை வணங்கிடுவோம் என்று குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன், பிறக்கும் தை அனைவரின் வாழ்விலும் நல்விடியலை ஏற்படுத்தட்டும் என்று கூறியுள்ளார்.

  Leave a Reply

  avatar
    Subscribe  
  Notify of