கச்சா எண்ணெய் விற்பனையில் டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை ஏற்க பிரதமர் மோடி கோரிக்கை

395

இந்தியா மற்றும் அயல் நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், நிபுணர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பின் விரிவாக்கம், எண்ணெய் ஆய்வு மற்றும் உற்பத்தி மேம்பாடு, சூரியசக்தி மற்றும் உயிரி எரிசக்திக்கான வாய்ப்புகள், எரிசக்தித் துறையில் மத்திய அரசின் அணுகுமுறை ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கச்சா எண்ணெய் உற்பத்தி போதுமான அளவு உள்ளபோதும், அதன் விலை தொடர்ந்து ஏற்றப்படுவதாக தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வால், அதனை பயன்படுத்தும் நாடுகள் நிதிப்பற்றாக்குறை போன்ற பொருளாதார சவால்களை சந்தித்து வருவதாக குறிப்பிட்டார்.

கச்சா எண்ணெய் வர்த்தகம் நுகர்வோர் நலனை கருத்தில் கொள்ளாமல் செயல்படுவதாக பிரதமர் கவலை தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலகின் மூன்றாவது பெரிய நாடு இந்தியா என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

எனவே கச்சா எண்ணெய் விற்பனையில் டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை ஏற்க எண்ணெய் வள நாடுகளும், விற்பனை நிறுவனங்களும் முன்வர வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார்.