புழல் சிறையில் கைதிகள் பிரியாணி சமைக்கும் வீடியோ வெளியானதால் பரபரப்பு

706

சென்னை புழல் சிறையில் கடந்த செப்டம்பர் மாதம் கைதிகளின் சொகுசு வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் டி.வி.க்கள், ரேடியோ, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து 5 கைதிகள் திருச்சி, சேலம் கோவை உள்ளிட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். அதேபோல் தலைமை வார்டர்கள் உள்பட 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றாலும் புழல் விசாரணை கைதிகள் சிறையில் பீடி, சிகரெட், கஞ்சா ஆகியவற்றின் விற்பனை தடையின்றி அதிக விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பீடிக்கட்டு ரூ.500 க்கும், ஆம்லெட் ரூ.100க்கும், மட்டன் குழம்பு ரூ.1500க்கும் சிக்கன் பிரியாணி 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புழல் சிறையில் கைதிகள் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் கைதிகள் அறையில் டிவி, எப்எம் ரேடியோக்கள் உள்ளிட்டவைகளும் இருப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. சிறையில் சொகுசு வசதிகள் இருந்தது தெரியவந்த நிலையில் கைதிகள் பிரியாணி செய்ததாக தற்போது புதிய புகார் எழுந்துள்ளது.

Advertisement