வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: அறிமுக போட்டியிலேயே சதம் கண்ட பிரித்வி ஷா

769

ராஜ்கோட்: பிரத்வைதே தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று துவங்கியது.

இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் பிரித்வி ஷா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே கேப்ரியல் பந்து வீச்சில் லோகேஷ் ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து களமிறங்கிய புஜாரா, ப்ரித்வி ஷாவுடன் கை கோர்த்தார்.

இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை மிக சுலபமாக எதிர்கொண்டு அணியின் ரன்ரேட்டை உயர்த்தி வந்தனர். குறிப்பாக, அறிமுக வீரர் பிரித்வி ஷா வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து அரை சதம் கண்டார். இதனிடையே மறுமுனையில் விளையாடி வந்த புஜாராவும் அரை சதம் காண மைதானத்திலிருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

தொடர்ந்து அதிரடி காட்டி வந்த பிரித்வி ஷா, தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். 101 பந்துகளை எதிர்கொண்ட பிரித்வி ஷா, 15 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் அடித்து இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இந்திய அணி தற்போது 34.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது. புஜாரா 74 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

Advertisement