“ஆல் இஸ் வெல்” சொன்னால் மட்டும் போதுமா PM சார்..? – பிரியங்கா காந்தி சாடல்..!

359

வெளிநாடுகளில் சென்று இந்தியாவைப் பற்றி ஆல் இஸ் வெல் (எல்லாம் நன்றாக இருக்கிறது) என்று சொன்னால் மட்டும் போதுமா? என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு ஒருவாரம் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இந்தியாவில் உள்ள நிலை குறித்து எல்லாம் நன்றாக இருக்கிறது (ஆல் இஸ் வெல்) என்று பல்வேறு இந்திய மொழிகளில் தெரிவித்தார்.

ஆனால், இந்தியாவின் பொருளாதாரச் சூழல் மிகவும் மோசமாகி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நாட்டின் ஜிடிபி முதல் காலாண்டில் 5.5. சதவீதமாகச் சரிந்துள்ளது, ஆட்டோமொபைல் துறை விற்பனை தொடர்ந்து 11 மாதங்களாகச் சரிவை நோக்கி வருகிறது.

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆனாலும் மத்திய அரசு பொருளாதார மந்தநிலையை உணர மறுக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பிரதமர் மோடிக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ”வெளிநாடுகளில் நீங்கள் பயணம் செய்யும்போதெல்லாம் அனைத்தும் நன்றாக இருக்கிறது (ஆல் இஸ் வெல்) என்று சொல்வதால் மட்டும் இந்தியாவில் ஒன்றும் சரியாகிவிடாது. நடப்பு நிதியாண்டின் எந்தக் காலாண்டிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகரிக்கவில்லை.

புதிய வேலைவாய்ப்பு உருவாகவில்லை. மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்கள் கூட ஊழியர்களை வேலையில் இருந்து அனுப்புகின்றன. அனைத்தும் நன்றாக இருக்கிறது என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது அமைதியாக இருக்கிறார்கள். அது ஏன்?” என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

அதுமட்டுமல்லாமல் இன்போசிஸ், காக்னிசென்ட் ஆகிய இரு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 25 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு எடுத்துள்ள செய்தியின் பிரதியையும் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.