பொதுத்தேர்வு நடத்தினால் இத்தனை பிரச்சனையா??? சிறப்புத் தொகுப்பு!

773

முன்னுரை :-

ஓடி விளையாடு பாப்பா – நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா – ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

 

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு – என்று

வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா

 

புரட்சிக்கவி பாரதியார் பாடிய இப்பாடலின் வரிகள் காலப்போக்கில் தலைகீழாக மாறிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை.  மாலை பள்ளி முடிந்து நண்பர்களுடன் மைதானத்திற்கு சென்று உற்சாகமாக விளையாடிய பிள்ளைகள், தற்போது வீட்டில் முடங்கி விட்டதால் பாரதியின் பாட்டையும் இப்படித்தான் பாட வேண்டியுள்ளது.

வீட்டில் உட்கார்ந்து விடு பாப்பா- நீ

வேர்வை சிந்தலாகாது பாப்பா

செல்லில் கேமை டவுன்லோடு பண்ணு பாப்பா- நீ

பப்ஜி பிளே பண்ணு பாப்பா

 

காலை எழுந்தவுடன் ஸ்கூல்- பின்பு

போக வேண்டும் நீ டியூசன்

பின்பு மீண்டும் விளையாடு – நீ

பிளே ஸ்டேசன்

 

பள்ளி குழந்தைகளின் வாழ்க்கை இவ்வாறு நவீனமாகிப்போனதால்  மாணவர்கள் உயர்நிலைப்பள்ளி படிப்பை எட்டும்போது அதிகபட்ச மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.  இந்நிலையில், 5 மற்றும் 8 அம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவை தமிழகத்தில் அரசு நிரைவேற்ற உள்ளது.

பொதுத் தேர்வு முறையின் மூலம் எழும் பிரச்சினைகளை தேடும் பொழுது, எளிதில் கண்ணுக்கு புலப்படுகிற மிகவும் முக்கியமான ஐந்து பிரச்சினைகளையும், இதுகுறித்த கல்வியியல் வல்லுனர்களின் கருத்தையும் தற்போது பார்க்கலாம்.

 

  1. தற்கொலை

 

  1. குழந்தை திருமணம் அதிகரிப்பு

 

  1. மண அழுத்தம் அதிகரிப்பு

 

  1. முதல் தலைமுறை மாணவர்கள் பாதிப்பு

 

  1. இடைநிற்றல்

 

இதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

  1. தற்கொலை:-

இந்தியாவில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறான். இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களில் முதலில் இருப்பது, குழந்தைகளின் படிப்பில் பெற்றோரின் அழுத்தம். மதிப்பெண்களை நோக்கி மாணவர்களை பெற்றோர் பயணம் செய்ய வைப்பதால் மாணவர்களின் மனவலிமை குறையும் அபாயம் உள்ளது என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.  பத்தாம் வகுப்பிலோ, பன்னிரண்டாம் வகுப்பிலோ தேர்ச்சி பெறவில்லை என்றாலோ, மதிப்பெண்  குறைவாக இருந்தாலோ மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள்.

இந்த மன அழுத்தத்தை உயர்நிலைப்பள்ளி மாணவர்களாலேயே சந்திக்க முடியாத நிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்கள் எவ்வாறு சந்திப்பார்கள் என்பதே கல்வியாளர்களின் கேள்வியாக உள்ளது. 5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையில் இது முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது.

  1. குழந்தை திருமணம் :-

நம் சமுதாயத்தில் இருந்த முக்கிய பிரச்சினைகளில், குழந்தை திருமணமும் ஒன்று. குழந்தை திருமணத்தால், பெண்களின் முன்னேற்றம் கண்டிப்பாக குறையும். பெரியார், அம்பேத்கர் போன்ற பல்வேறு தலைவர்களின் தீவிர முயற்சியால், இந்த பிரச்சினை தடுக்கப்பட்டது. இருப்பினும் ஆங்காங்கே சிறுமிகளுக்கு திருமணம் நடந்து கொண்டு தான் வருகிறது. இந்த திருமணங்களுக்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கும் பொழுது,  பத்து அல்லது 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை, சரியாக படிப்பதில்லை என்ற காரணங்கள் அதிகமாக உள்ளது.  5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு  திட்டத்தை அமுல்படுத்தினால், குழந்தை திருமண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் சமுகத்தில் பெண்களின் குறைந்தபட்ச கல்வியறிவு சதவிகிதமும் குறையலாம்.

  1. மண அழுத்தம் அதிகரிப்பு:-

நம் வாழ்வில் அணைவரும் திரும்பப் பெற வேண்டும் என்று நினைப்பவைகளில் குழந்தை பருவமும் ஒன்று. பிரச்சிணைகளை பற்றி கவலைப்படாத வயது, அழுத்தம் இல்லாத வயது, வஞ்சகம் இல்லாத வயது, போட்டி இல்லாத வயது. நாம் குழந்தைகளை பார்த்து பொறாமைப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். இப்படி இருக்க, நாம் அனுபவித்து வரும் வேதனைகள் மற்றும் மன அழுத்தத்தை நமது சந்ததிகளும் அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும். இந்த பிரச்சினைக்கு நமது அரசு என்ன மாற்று வழி வைத்துள்ளது என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

  1. முதல் தலைமுறை மாணவர்கள் பாதிப்பு:-

காலம் காலமாக கல்வியை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமலும், குறைந்தபட்ச பள்ளி படிப்பையும் முடிக்காமலும்  இன்றும் பொதுமக்கள் இருக்கின்றனர். இந்த தலைமுறையில் முதல் முறையாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பள்ளியில் தேர்ச்சி பெறுவது கடினமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய மாணவர்கள், தேர்வில் தேர்ச்சி பெறாதபோது, அந்த தலைமுறை பின்தங்கிய நிலையிலேயே இருக்கும். இந்த சந்ததியினர் படிப்பறிவு பெறுவதற்கு அடுத்த தலைமுறை வரை காத்திருக்க வேண்டும். இதனால் சமுதாயத்தில் சமமற்ற நிலை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

  1. இடைநிற்றல் :-

குறைவாக கற்றல் திறன் இருக்கும் ஒரு மாணவன், தேர்வு முறைகளால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.  சமுதாயத்தில் கல்வி என்பது போட்டியாக மாறாமல், சமுதாய முன்னேற்றம் என்ற நிலை அனைவரிடமும் ஏற்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் முன்னேற்றம் ஏற்பட்டால், அதை வீக்கம் என்ற பொருளாதாரத்தில் குறிப்பிடுவார்கள். குறைவாக கற்றல் திறன் கொண்டவர்கள், இந்த தேர்வு முறைகளின் மூலம் பாதிக்கப்படுவார்கள். ஒரு மாணவன் ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்கு செல்வற்குள், அவன் தனது வயதை இழந்து விட்டால், படிப்பில் வெறுப்பு ஏற்பட்டு படிப்பை இடையில் நிறுத்தி விடுகிறான். இதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுவும் கட்டாய பொதுத்தேர்வில் உள்ள முக்கிய பிரச்சினை.

முடிவுரை :- 

வளர்ந்து வரும் நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளில் உயர்நிலைப்பள்ளியில் தான் தேர்வுகள் வைக்கப்படுகிறதாம். அதுவரை மாணவர்களின் கற்றல் திறன்கள் தான் வளர்க்கப்படுகிறது.  தேர்வு முறைகளால் மாணவர்களின் கல்வியறிவு அதிகரிக்குமா என்ற கேள்வி இப்போதும் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. கட்டாய தேர்வு திட்டத்தால் இதுபோன்று பல  பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு அரசு என்ன தீர்வு வைத்துள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.