போலீசை எதிர்த்து மறியல் நடந்ததை பார்த்ததுண்டு ஆனால் ஆதரவு தெரிவித்து பார்த்ததுண்டா?

938

கும்பகோணம் அருகே உள்ள திருநீலக்குடி காவல் நிலையத்தின் துணை காவல் ஆய்வாளர் அருள்குமார். இவருக்கு வயது 30 தான் ஆகிறது. இந்த ஊருக்கு இவர் துணை காவல் ஆய்வாளராக வந்ததில் இருந்தே எல்லாத்திலும் அதிரடிதான்.

குறிப்பாக மணல் கொள்ளை, சாராயம் கடத்தல் போன்றவற்றை தீவிரமாக கண்காணித்து எதிரிகளை மிரள வைத்தார். இதில் பெருமளவு காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் புதுச்சேரி மாநில மதுவகைகளை கட்டுப்படுத்தியதுதான் அதிகம். இவரின் அதிரடி நடவடிக்கைகள் குற்றவாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதன் மூலம் இவர் மீது பொதுமக்களுக்கு தனி மரியாதை ஏற்பட ஆரம்பித்தது. இந்த சிறு வயதில் இப்படி திறமையாக வேலை பார்க்கிறாரே என்று மக்கள் அருள்குமாரை புகழ்ந்தனர். இவரது இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக அருள்குமாருக்கு பேராவூரணிக்கு பணிமாறுதல் உத்தரவு வந்தது.

இதை கேட்டு, திருநீலக்குடி மட்டுமல்லாமல், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் எல்லோருமே அதிர்ச்சி அடைந்தனர். இந்த பணிமாறுதல் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரோட்டிகளை தயார் செய்து ஊரெல்லாம் ஒட்டினார்கள். இந்த தகவல் அரசுக்கு போய் சேராது என்று நினைத்த மக்கள், கும்பகோணம்-காரைக்கால் சாலையில் அந்தமங்கலம் என்ற இடத்தில் சாலை மறியலை ஆரம்பித்து விட்டார்கள். இதற்காக சுற்றுவட்டார மக்கள் எல்லோருமே திரண்டனர்.

இந்த செய்தி திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு போனது. அவர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். “இதே ஊரில் அருள்குமார் துணை காவல் ஆய்வாளராக இருக்க வேண்டும் என்றும் அவரை மாற்ற விட மாட்டோம்” என்று மக்கள் தெரிவித்தனர்.

சில தவிர்க்க முடியாத காரணமாகதான் அவரை மாற்ற வேண்டியதாக ஆயிற்று என்று காவல்துறை தரப்பில் மக்களிடம் நீண்ட நேரம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

எனினும், 11 மாதமாகதான் இங்கு அருள்குமார் பணியாற்றினாலும், ஊர் மக்கள் இவ்வளவு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ளதை அறிந்து மற்ற காவலர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of