கழிவு நீர் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி

869

நெல்லை மாவட்டம் அம்மாசமுத்திரம் தாலுகா, பொட்டல்புதூர் அருகே ரவணசமுத்திரத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அய்யம்பிள்ளை குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் ரவணசமுத்திரம் மேட்டுத் தெருவிற்கு பின்னால் உள்ள மறுகால் ஓடை வழியாக சென்று தென்பகுதியில் உள்ள ராமநதி ஆற்றில் கலக்கிறது. இந்த மறுகால் ஓடையில் அக்கம்பக்கத்தினர் தங்களது வீடுகளில் உள்ள கழிவு நீரை கலக்கின்றனர்.

இந்நிலையில் மறுகால் ஓடை தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாததாலும், மழையின் காரணமாக, மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து மேட்டுத் தெருவில் தேங்கியுள்ளது. இதனிடையே, கழிவு நீரில் இறந்த நாயின் சடலம் மிதப்பதால் அப்பகுதியில் நொய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அய்யம்பிள்ளை குளத்தின் மறுகால் ஓடையை தூர்வார வேண்டும் என்றும், மேட்டுத்தெரு, முகைதீன் தெருவில் மறுகால் ஓடையில் கழிவு நீரை கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இதற்கு முன் போராட்டம் நடத்தினர்.

அப்போது அக்கிறமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என கடையம் போலீசார் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று வரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதுகுறித்து ரவணசமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என போராட்டம் நடைபெறும் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement