புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் – 20ம் தேதி கூட்டத்தொடர் தொடங்குகிறது

238

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2020 – 21ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக வரும் 20ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 30-ம் தேதி அரசின் 3 மாத செலவினங்களுக்கு ரூ.2,042 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டுக்கான காலக்கெடு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் ஜூன் 30-ம் தேதிக்குள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு முடிவெடுத்தது. இதற்காக ரூ.9,500 கோடிக்கு பட்ஜெட் மதிப்பீடு செய்து மத்திய அரசு ஒப்புதலுக்கு புதுவை அரசு அனுப்பியது.

ஊரடங்கால் மாநில வருவாய் குறைவை சுட்டிக்காட்டி மதிப்பீட்டை குறைத்து அனுப்பும்படி மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனையடுத்து, புதுச்சேரி அரசு ரூ.9,000 கோடிக்கு பட்ஜெட் மதிப்பீடு செய்து அனுமதிக்காக அனுப்பி வைத்தது. ஆனால், இதற்கு உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. நீண்ட இழுபறிக்கு பின்னர் புதுவை அரசு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து வரும் 20-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

அன்றைய தினம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரைக்கு பிறகு, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி 2020 21 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக 2 நாட்கள் மட்டுமே பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement