“புதுச்சேரி மாநிலமா..? யூனியன் பிரதேசமா..?” – நாராயணசாமி ஆதங்கம்..!

292

புதுச்சேரி மாநிலமா? யூனியன் பிரதேசமா? திருநங்கை என அறிவித்து விடுங்கள் என, நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்திய நிதி கூட்டாட்சியிலுள்ள சவால்கள் தொடர்பாக தேசிய கருத்தரங்கை புதுச்சேரியில் இன்று (நவ.21) தொடங்கி வைத்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

“யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் 15-வது நிதிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியும், டெல்லியும் நிதிக்குழுவில் சேர்க்கப்படவில்லை.

புதுச்சேரியை நிதிக்குழுவில் சேர்க்க பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் என பலரையும் சந்தித்தேன். இதுவரை செயல்படுத்தாமல் புதிதாக பிரித்த மாநிலத்தை மட்டும் சேர்த்துள்ளனர்.

தொடக்கத்தில் புதுச்சேரிக்கு 70 சதவீதம் மத்திய அரசு நிதி கிடைத்து வந்தது. தற்போது 30 சதவீதம்தான் மத்திய அரசு நிதி என்று தெரிவித்தனர். ஆனால், கையில் கிடைப்பதோ 26 சதவீத மத்திய அரசு நிதிதான்.

அதேநேரத்தில் மாநிலங்களுக்கு 42 சதவீத மத்திய அரசு நிதி கிடைக்கிறது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு உள்ளது. பல விஷயங்களுக்கு இடையிலும் 11.4 சதவீதம் மாநில வளர்ச்சி உள்ளது.

மத்தியிலுள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேசம் ஆகிய இரு நிதிக்குழுவிலும் புதுச்சேரி இல்லை. புதுச்சேரி யூனியன் பிரதேசம், ஜிஎஸ்டி, சுங்கம் உள்ளிட்ட பல்வேறு வருவாயை மத்திய அரசு பெறும் போது மாநிலமாக கருதுகிறது.

அதேபோல் மக்கள் நலத்திட்ட நிதிகள் ஒதுக்கீட்டின்போது யூனியன் பிரதேசமாக கருதுகிறது. இதற்கு எங்களை ‘திருநங்கை’ என அறிவித்து விடுங்கள்.

எங்களிடம் வளம் உள்ளது, நிதியில்லாமல் பல்வேறு சிக்கல்களில் தவிக்கிறோம். மத்திய அரசிடமிருந்து போதிய ஆதரவு எங்களுக்கு கிடைக்கவில்லை,”

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of