காருக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு… – பேருந்தில் பயணம் செய்த புதுச்சேரி அமைச்சர்..!

416

புதுச்சேரி இ.சி.ஆர் சாலையில் உள்ள அமுதசுரபி பெட்ரோல் பங்கில் மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் கார்களுக்கு கடனில் பெட்ரோல் நிரப்பப்படுவது வழக்கம். அதற்கான தொகையை தொடர்புடைய துறை அமுதசுரபி நிர்வாகத்திற்கு செலுத்திவிடும்.

அவ்வாறு பெட்ரோல் நிரப்பப்பட்ட வகையில் ரூபாய் 2.30 கோடி கடன் நிலுவையில் உள்ளது. அதையடுத்து டிசம்பர் 31- ஆம் தேதியிலிருந்து கடனில் பெட்ரோல் போட வேண்டாம் என அமுதசுரபி நிர்வாகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில் புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்கு அமைச்சரின் ஓட்டுனர் நேற்று (02.01.2020) இரவு இ.சி.ஆர் அமுதசுரபி பெட்ரோல் பங்கிற்கு காரை எடுத்து சென்றுள்ளார்.

ஆனால் அங்கு முந்தைய நிலுவைத் தொகைகள் வழங்கப்படவில்லை என கூறி பெட்ரோல் பங்க் ஊழியர்கள் எரிபொருள் நிரப்ப மறுத்துவிட்டனர். இந்த நிலையில் இன்று (03.01.2020) மாலை புதுச்சேரியில் நடைபெறும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரி அரசு பேருந்தில் சென்றார்.

அமைச்சர் காருக்கு பெட்ரோல் நிரப்ப மறுத்ததும், அமைச்சர் பேருந்தில் பயணித்ததும் புதுச்சேரியில் பரபரப்பாகியுள்ளது.