ஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..! – ரெங்கசாமி, அமமுக

218

ஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்த்து அமமுகவை தரமற்ற வார்த்தைகளால் வா.புகழேந்தி விமர்சிக்கிறார் என அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தஞ்சாவூரில் அமமுகவின் போட்டி கூட்டத்தை புகழேந்தி கூட்டி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அந்தக் கூட்டத்தில் தஞ்சாவூர் மண்டலத்திலிருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை. மாறாக சேலம், கோவை பகுதியில் உள்ளவர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்தியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இதுபோல கூட்டத்தை நடத்த புகழேந்திக்கு பல வழிகளிலும் ஆளுங்கட்சி உதவுகிறது. ஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்த்து, அமமுகவை அவர் தரமற்ற வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார்.

அமமுகவை யாரும் கலைக்க முடியாது, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக பதிவு செய்து, பொதுவான ஒரு சின்னத்தை பெற்று விடுவோம்.

அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது போகப் போகத் தெரியும். உள்ளாட்சித் தேர்தலில் அமமுக பெருவாரியான இடங்களில் வெற்றிபெறும்.

வரும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அதிமுக கூடாரம் காலியாகிவிடும். எல்லோரும் எங்களுடன் இணைந்துவிடுவார்கள். அப்போது சசிகலாவும் சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவார். அவரது தலைமையில்தான் நாங்கள் இயங்குவோம்.

அமமுகவிலிருந்து ஓரிருவர் அதிமுகவுக்கு சென்றால் கூட 100 பேர், 200 பேர் இணைந்ததாக மிகைப்படுத்தி அதிமுகவினர் கூறி வருகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான, விசுவாசமான தொண்டர்கள் அமமுகவில் டிடிவி.தினகரனிடம்தான் உள்ளனர் என்றார்.