புல்வாமா: உயிரிழந்த துணை ராணுவத்தினர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு

429

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் மீது கடந்த மாதம் 14-ந் தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

மத்திய ரிசர்வ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த இந்த வீரர்களின் உயிரிழப்பு நாடு முழுதும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த வீரர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் இழப்பீட்டு தொகையும், நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பல்வேறு மாநில அரசுகள் சார்பில் சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதுடன், சில மாநில அரசுகள் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி வருகிறது.

அத்துடன் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் இந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றன. மேலும் அந்த குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின் கல்விச்செலவையும் ஏற்பதற்கு பல்வேறு பிரபலங்கள் முன் வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த வீரர்களின் பணி விதிகளின் அடிப்படையில் அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி பணியின் போது உயிரிழக்கும் மத்திய ஆயுதப்படை வீரருக்கு மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை ரூ.35 லட்சம், ஆபத்துக்கால நிதி ரூ.21.50 லட்சம், ‘இந்தியாவின் ஹீரோ’ தொகுப்பு நிதி ரு.15 லட்சம், துணை ராணுவத்தினருக்கான பாரத ஸ்டேட் வங்கி காப்பீட்டு நிதி ரூ.30 லட்சம் என ரூ.1.01 கோடி வழங்கப்படுகிறது.

இதைத்தவிர உயிரிழந்த வீரர் கடைசியாக வாங்கிய அடிப்படை ஊதியத்துடன், அகவிலைப்படியும் சேர்த்து மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த தொகையை வீரரின் மனைவி, வாழ்நாள் முழுவதும் பெற முடியும்.

உயிரிழந்த வீரர்களில் சிலரின் குடும்பத்தில் ஒருவருக்கு அந்தந்த மாநிலங்கள் சார்பில் அரசு வேலை வழங்கப்பட்டாலும்,அந்த வீரரின் குடும்பத்தினருக்கு சி.ஆர்.பி.எப். படைப்பிரிவிலும் கருணை அடிப்படையில் வேலை பெற தகுதி உண்டு எனவும் துணை ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of