சொத்துப் பிரச்சனை! மாற்றுத்திறனாளிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கொடூரம்…?

684

திருவண்ணாமலை மாவட்டம் ஈச்சங்குப்பம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு வெங்கடேச பெருமாள் என்ற மாற்றுத்திறனாளி மகன் உள்ளார்.

வெங்கடேச பெருமாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் நேரத்தில் அதே கிராமத்தை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் செல்வக்குமார், வீட்டிற்கு வந்து ஊசி போட்டுவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் செல்வக்குமார், ஏழுமலை வீட்டிற்கு வந்து வெங்கடேச பெருமாளுக்கு ஊசி போட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து அவருக்கு உடல்உபாதை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேலூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது வெங்கடேச பெருமாளின் ரத்தத்தில் எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்தது.

தங்களது நிலத்தை அபரிக்கும் நோக்கிலேயே செல்வகுமார் தனது மகனுக்கு எச்.ஐ.வி தொற்று ரத்தத்தை ஏற்றியதாக ஏழுமலை புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.