ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு பொய் சொன்னதை வெளிச்சத்திற்கு கொண்டுவருவோம் – அருண் ஷோரி

612

ரபேல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் சொன்னதை நாங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என்று மூத்த வழக்கறிஞர் அருண் ஷோரி பேட்டியளித்துள்ளார்.

ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

தி இந்து இதழில் வெளியான ஆதாரங்களை ஏற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.

இந்த தீர்ப்பு குறித்து தற்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண் ஷோரி பேட்டியளித்துள்ளார். அதில், ரபேல் தொடர்பான ஆவணங்கள் எல்லாமே பாதுகாப்பு அமைச்சகத்தின் மிக முக்கிய ஆவணங்கள் ஆகும்.

எங்களிடம் நீதிபதிகள் தொடர்ந்து முறைகேட்டிற்கான ஆதாரங்களை கேட்டார்கள். நாங்கள் இதோ எப்போது ஆதாரங்களை சமர்ப்பணம் செய்து இருக்கிறோம்.

 

நாங்கள் கொடுத்த ஆதாரங்கள் சரியாக இருக்கிறது. அதனால் ஆதாரங்களை விசாரிப்பதாக நீதிமன்றம் ஒப்புகொண்டு இருக்கிறது. இந்த ஆதாரங்களை எல்லாம் நீதிமன்றத்தில் இத்தனை நாட்கள் மத்திய அரசு மறைத்தது. தற்போது அது வெளியே வந்து இருக்கிறது.

 

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான ஆவணங்களை அளித்து இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தை அவர்கள் ஏமாற்றி, பொய் சொல்லி இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியதை நிரூபிப்போம். அதற்கான வாய்ப்புதான் இது.

 

எங்களுக்கு இந்த வழக்கில் நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முதலில் வழங்கிய தீர்ப்பை மாற்றும் அளவிற்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய ஆதாரங்களின்படி இந்த வழக்கு செல்லும் பாதை மொத்தமாக மாற போகிறது, என்று அருண் ஷோரி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of