காஞ்சனா பட ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்! இது தான் காரணமாம்!

963

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை லக்ஷ்மிபாம் எனும் பெயரில் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அக்ஷய் குமார் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அக்ஷய்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். இந்நிலையில் லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“மதியாதார் தலைவாசல் மிதியாதே என தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த உலகத்தில் பணம், புகழை தாண்டி, சுயமரியாதை தான் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். எனவே லக்ஷ்மி பாம் படத்தில் இருந்து நான் விலக முடிவு செய்துள்ளேன். இந்த முடிவை எடுத்ததற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

அதில் ஒன்றை மட்டும் கூறுகிறேன். எனக்கு தெரியாமலேயே படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மூன்றாவது நபர் சொல்லி தான் அது எனக்கு தெரியும். மேலும் அந்த போஸ்டர் அவ்வளவு நன்றாகவும் இல்லை. படத்தின் இயக்குனரான என்னை கேட்காமல், எனக்கு தெரியாமல் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இது எனக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது எனக்கு அவமரியாதையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் எந்த இயக்குனருக்கும் ஏற்படக் கூடாது. நான் எனது பட ஸ்கிரிப்டை அப்படியே தர தயாராக இருக்கிறேன். காரணம், அக்ஷய்குமார் சார் மீது தனிப்பட்ட முறையில் நிறைய மரியாதை வைத்திருக்கிறேன்.

அவர்கள் விருப்பம் போல் வேறு இயக்குநரை வைத்து இப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். விரைவில் நேரில் சென்று அக்ஷய்குமாரை சந்தித்து இந்த ஸ்கிரிப்டை அவரிடம் ஒப்படைத்து விட்டு, நல்ல முறையில் இப்படத்தில் இருந்து நான் வெளியேறி விடுவேன்.

லக்ஷ்மி பாம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியில் இப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of