அத்வானி குறித்து பேச்சு! ராகுல் மீது பாயும் பாஜக!

491

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானிக்கு குஜராத் மாநிலம், காந்திநகர் தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு அளிக்கவில்லை. அவரது தொகுதி, கட்சியின் தலைவரான அமித் ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாரதீய ஜனதா கட்சி நிறுவப்பட்ட நாளையொட்டி, தனது மவுனத்தை கலைத்துக்கொண்டு, வலைப்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர்,

“முதலில் தேசம், அடுத்து கட்சி, இறுதியாகத்தான் நான். இதுவே எனது வாழ்க்கையில் நான் கடைபிடிக்கும் கொள்கை. அரசியல் ரீதியாக எங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை நாங்கள் எதிரிகளாக கருதுவதில்லை. அவர்கள் எங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமே”

என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மராட்டிய மாநிலம், சந்திராப்பூரில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“மோடி தனது குருவுக்கு(அத்வானிக்கு) என்ன செய்தார் என்று பாருங்கள். அவர் அவமதிக்க மட்டும் செய்யவில்லை, களத்தில் இருந்து தனது குருவை பிடித்து தள்ளி விட்டார்”

என கூறினார்.

இந்த கருத்துக்காக ராகுல் காந்தி மீது பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் பாய்ந்தனர்.

அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய வெளியுறவு மந்திரியுமான சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில்,

“அத்வானி எங்கள் தந்தை போன்றவர். உங்களுடைய வார்த்தைகள் எங்களை ஆழமாய் புண்படுத்தி விட்டன. தயவு செய்து புண்பட்ட வார்த்தைகளால் கண்ணியத்துடன் பேசுங்கள்” என கூறி உள்ளார்.

இதேபோன்று மற்றொரு மூத்த தலைவரும், ரெயில்வே மந்திரியுமான பியூஸ் கோயல், டெல்லியில் நிருபர்களிடம் பேசியபோது ராகுலுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர்,

“ஊழல்வாதிகளின் கூட்டணிக்கு தலைமை ஏற்க விரும்புகிற ஒருவர், இப்படி மூத்த தலைவர்களுக்கு எதிராக பேசி இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் இன்றைக்கு மக்களால் நிராகரிக்கப்படும் நிலையில், யோசனைகள் இழந்து, வனாந்திரத்தில் முற்றிலும் தொலைந்துபோனது போல எனக்கு தோன்றுகிறது”

என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of