மோடி சமூகத்தை இழிவுப்படுத்தினாரா ராகுல்? – பிரதமரின் கண்டனம் ஏன்?

320

என்னை இழிவுபடுத்துவதற்காக, ஒரு சமுதாயத்தையே திருடர்கள் என்று முத்திரை குத்துவதா? என்று ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ஏன் எல்லா திருடர்களும் ‘மோடி’ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்?” என பிரதமர் நரேந்திர மோடி, நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் ஊழல் செய்வதாக குறிப்பிட்டு பேசினார்.

ஆனால் இதை திசை திருப்பும் வகையில் ஒட்டுமொத்த சமூகத்திற்கு எதிராக ராகுல் காந்தி பேசியதை போல் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசி வருகிறார்.

இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் பாடபாராவில் நேற்று பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது:-

ஒடுக்கப்பட்டவர்களை விமர்சிப்பதும், நாடு முழுவதும் பா.ஜனதா அலை வீசுவதால், காங்கிரசும், அதன் கலப்பட கூட்டணி கட்சிகளும் விரக்தியில் உள்ளன. அவர்களால் இரவில் தூங்க முடியவில்லை. அதனால்தான் இப்படி பேசுகின்றன. இதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் தினந்தோறும் எல்லை மீறி பேசி வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மோடி என்ற பெயரில் யார் இருந்தாலும் திருடர். என்ன அரசியல் இது? என்னை இழிவுபடுத்துவதற்காக,

ஒரு சமுதாயத்தையே திருடர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். இங்கே ‘சாஹு’ என்று அழைக்கப்படும் சமூகம்தான், குஜராத்தில் மோடி என்று அழைக்கப்படுகிறது.

நேர்மையாக வரி செலுத்துபவர்களை சுயநலவாதிகள் என்று காங்கிரஸ் சொல்கிறது. பரம்பரை குடும்பம்தான், கோடிக்கணக்கான ரூபாய் வருமானவரி மோசடியில் ஈடுபட்டுள்ளது. தற்போது, ஜாமீனில் உள்ளது. பாதுகாப்பு தளவாட பேரங்களில் கமிஷன் வாங்கியது.

உங்களது ஒரு ஓட்டின் வலிமைதான், துல்லிய தாக்குதல், எல்லை தாண்டி சென்று விமான தாக்குதல் நடத்தவும், செயற்கைகோளை சுட்டு வீழ்த்தவும் இந்தியாவுக்கு வழிவகுத்து கொடுத்தது.

இவ்வாறு மோடி பேசினார்.

சத்தீஷ்கார் மாநிலம் கொர்பாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-

தரக்குறைவாக பேசுவது பரம்பரை குடும்பத்தின் இயல்பாகி விட்டது. மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்களா? இந்த கும்பலை நாம் தூக்கி எறிய வேண்டும்.

காங்கிரஸ் கட்சி, நக்சலைட்டுகளுடன் கைகோர்த்து செயல்படுகிறது. தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை பார்த்து வன்முறையாளர்களும், பயங்கரவாதிகளும் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடுகிறார்கள் என பேசிய அவர்,

சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு, மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறுத்தி விட்டனர்.

விவசாயிகள் நிதி உதவி திட்டத்துக்கு விவசாயிகள் பெயர்களையும் அனுப்பிவைக்கவில்லை. இதனால், மக்களுக்குத்தான் பாதிப்பு. என பேசினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of