தொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி

513

கர்நாடக முதல்வர் குமாரசாமியை விமர்சித்து பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காங்கிரசாருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். அவரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் காங்கிரசார் உள்ளனர்.

இந்த கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து காங்கிரஸ் தலைவர்களுக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. சமீபகாலமாக இரு கட்சியினருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் இடையே வார்த்தை போர் வெடித்து குமாரசாமியை நீக்கக் கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதற்காக ரகசிய ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் குண்டுராவ், முன்னாள் முதல்-அமைச்சர் சித்த ராமையா, துணை முதல்- மந்திரி பரமேஸ்வரா ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் குமாரசாமி மீது சரமாரியாக புகார் கூறினார்கள்.

அதோடு கூட்டணிக்கு எதிராக குமாரசாமியும், மதச் சார்பற்ற ஜனதாதளம் தலைவர்களும் பேசிவரும் தகவல்களையும் தெரிவித்தனர். இவை அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட ராகுல் இப்போதைக்கு எந்தவித முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் கூட்டணியை சீர்குலைக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என்றும், பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர்களுடன் இணைந்து செயல்படுமாறும் கேட்டுக் கொண்டார்.

குமாரசாமியை விமர்சித்து பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார். இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இனி அமைதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of