கனமழை வெள்ளத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்

735

ஈரோடு அருகே கனமழை வெள்ளத்தால் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து நீர்வழிப் பாதைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதையடுத்து தடப்பள்ளி வாய்க்காலில் உபரிநீர் மதகுகள் திறக்கப்பட்டதால், பாரியூர் பழைய கரை பகுதியில் உள்ள கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

இதனால் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. கால்வாய் மற்றும் நீர்வழிப்பாதைகளை தூர்வாராததே சேதத்திற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பயிர்களை கோபிச்செட்டிப்பாளையம் வட்டாட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement