“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..!

216

அதிமுக அமைச்சர்களிலேயே பாஜகவுக்கு ஏகப்பட்ட சப்போர்ட்டுகளை டைம் கிடைக்கும்போதெல்லாம் வாரி வழங்குபவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதான்.

சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர்,

சமீபத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் சிலர் கோரிக்கை மனுவை அளிக்க சென்றபோது நீங்க தான் எங்களுக்கு ஓட்டு போட மாட்டீங்களே..! போயி திமுக எம்.பி கிட்ட மனு கொடுங்க” என பேசி விரட்டினார்.

இந்த விவகாரம் பூதாகரமாக மாறி ஊடகங்களில் விவாதமாக மாறியதும், தான் அப்படி சொல்லவில்லை எனவும், திமுக-வினர் பொய்யான வதந்தியை பரப்புகின்றனர் என குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல், தமிழகமே அன்று அமித்ஷாவின் இந்தி திணிப்பு குறித்து பற்றி கொண்டு எரிந்தபோது, “அமித்ஷா அப்படி பேசவே இல்லை.. இந்தி மொழி பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பிரச்சனை உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறியவர் இதே அமைச்சர்தான்.

அதேபோல, ”ராகுல் காந்தி இந்தியாவில் பிறந்து இருந்தாலும், அவர் இத்தாலியில் அவரது தாய் மாமா மடியில் அமர்ந்து மொட்டை போட்டுக் கொண்டார். அவரது தாயும், அவரது தாய் மாமாவும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள்.

வேறு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நாடு பற்றிய கவலையில்லை. ராகுல் காந்தி இத்தாலியில் பிறந்தவர். இந்தியாவை இந்தியன்தான் ஆளணும்” என்று பேசியதும் இதே அமைச்சர்தான். இதனால் காங்கிரசின் எக்கச்சக்க எரிச்சல்களுக்கு ஆளானவர்.

இந்நிலையில், அமித்ஷாவுக்கு இன்று பிறந்த நாள்.. அதனால் பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இதற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் வாழ்த்து சொல்லி ட்வீட் போட்டு உள்ளார்.

“பாஜக தேசிய தலைவர், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர், “ஆட்ட நாயகன்” @AmitShah ஜி அவர்களின் பிறந்த நாளில் பூரண நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மன மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறேன்…” என்று பதிவிட்டுள்ளார்.