மத்திய அரசிடம் திமுக எம்.பி-க்கள் சரணடைந்து விட்டனர் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

323

தமிழகத்தை பாதிக்கும் திட்டங்களை எதிர்க்காமல், மத்திய அரசிடம் திமுக எம்.பி-க்கள் சரணடைந்து விட்டதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

சிவகாசியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலூர் தொகுதி திமுக-வின் கோட்டை என்பது போன மாசம், தற்போது அதிமுக-வின் எஃகு கோட்டை என்று கூறினார். திமுக-வின் வேஷம் வேலூரில் கலைந்துவிடும் என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, வலுவாக மாட்டிக்கொண்ட திமுகவுக்கு மக்கள் சம்மட்டி அடிகொடுத்து வீட்டு அனுப்புவார்கள் என்று தெரிவித்தார்.

அண்ணா தலைமையில்  உண்மையாக பணியாற்றிய திமுக தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் அதிமுக-வுக்கு வர வேண்டும் என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்தார். தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்தை முதல்வர் ஏற்றுக்கொள்வார் என்றும் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் காங்கிரஸ் ஆட்சியில் திமுக-வின் உதவியோடு கொண்டுவரப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கூக்குரல் கொடுக்காமல், மத்திய அமைச்சர்களுடன் திமுக எம்.பி-க்கள் கை குலுங்கி ஒரே இலையில் உணவு அருந்திவிட்டு வருவதாக ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார். அதிமுகவை சீண்டிப் பார்க்க நினைத்தால் திமுக இருக்குமிடம் தெரியாமல் செய்துவிடுவோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.