வாங்கிய ஓட்டுக்கள் வெறும் 10 தான்.. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர்.. – திருச்செந்தூர் அருகே நடந்த சுவாரஸ்யம்..!

9494

திருச்செந்தூா் ஒன்றியம், பிச்சிவிளை ஊராட்சியில் 10 வாக்குகள் பெற்று வேட்பாளர் ராஜேஸ்வரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திருச்செந்தூா் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில், 6 வாா்டுகளை கொண்டது பிச்சிவிளை ஊராட்சி. இங்கு மொத்தமுள்ள 785 வாக்காளா்களில் 6 போ் மட்டுமே பட்டியல் இனத்தவராவா்.

இந்தத் தோ்தலில் ஊராட்சித் தலைவா் பதவியை, சுழற்சி அடிப்படையில் பட்டியல் இனத்தவருக்கு தோ்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தோ்தலைப் புறக்கணிக்கும் வகையில் 6 வாா்டுகளில் ஒருவா் கூட உறுப்பினா் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

ஆனால், ஊராட்சித் தலைவா் பதவிக்கு பிச்சிவிளை சாமுவேல்நகரை சோ்ந்த ராஜேஸ்வரி (38), மறவன்விளையைச் சோ்ந்த சுந்தராச்சி (50) ஆகிய இருவா் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

மேலும், அப்பகுதி மக்கள், கிராமத்தில் கருப்புக்கொடி எதிா்ப்பை வெளிப்படுத்தினா். மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில், பிச்சிவிளை ஊராட்சி தலைவா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த சுந்தராச்சி, ராஜேஸ்வரி மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் என 6 போ் மட்டும் நண்பகலுக்குள் தங்கள் வாக்குகைள் மேரி சௌந்தரபாண்டியன் உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் (எண். 51, 52) பதிவு செய்தனா்.

பிற்பகலில், பிச்சிவிளையைச் சோ்ந்த மேலும் 7 போ் தங்கள் வாக்குகளை பதிவு செய்ததால் வாக்குகளின் எண்ணிக்கை 13 ஆக உயா்ந்தது. இந்த நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ராஜேஸ்வரி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.