சூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி! காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு

682

சில தினங்களுக்கு முன்பு அகரம் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்விக் கொள்கை குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

இது பற்றி பல்வேறு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது, புதிய கல்விக் கொள்கை பற்றி அரைகுறையாக அறிந்து, சூர்யா பேசுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை, மற்றும் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் சூர்யாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கமல்ஹாசன், சீமான், அன்புமணி ராமதாஸ், தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இதற்கிடையே சென்னையில் நடைபெற்ற காப்பான் பட இசை வெளியீட்டு விழாவிலும் புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் குரலுக்கு ஆதரவு கிடைத்தது.

திரைத்துறையில் வேலை செய்வதற்கு சம்பளம் வாங்குகிறோம் என்பதோடு இருக்காமல் தனக்கு சமூக அக்கறை உண்டு என சூர்யா செயல்பட்டதாக கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய அவரின் மகன் கபிலன் வைரமுத்து, புதிய கல்விக் கொள்கை பற்றி ரஜினிகாந்த் பேசி இருந்தால் மோடி கேட்டிருப்பார் என்று ஆதங்கப்பட்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய ரஜினிகாந்த், சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் வெளிப்பட்டதாக பாராட்டியதோடு, அவரின் கருத்தை வரவேற்ப்பதாக தெரிவித்தார்.

தாம் பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும் என சொன்னார்கள், சூர்யா பேசியதும் மோடிக்கு கேட்டுள்ளது என்றும் மாணவர்கள் படும் கஷ்டங்களை கண்எதிரே பார்த்து, அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருபவர் சூர்யா என்றும் பாராட்டினார்.