தயாரிப்பாளருக்கு வீடுவாங்கி கொடுக்கும் ரஜினிகாந்த்..!

296

பழம்பெரும் கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு 90 வயதாகிறது. அவரது சினிமா பயணம் தொடங்கி 75 ஆண்டுகள் ஆகிறது. பைரவி படத்தின் மூலம் ரஜினிகாந்தை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர்.

இதையொட்டி அவருக்கு தமிழ் கலாச்சார பண்பாட்டு பேரவை சார்பில் பாராட்டு விழா நடந்தது. இந்த அமைப்பின் தலைவர் பாரதிராஜா தலைமை தாங்கினார். கே.பாக்யராஜ், கே.ஆர்.விஜயா, அமீர், ஆர்.கே.செல்வமணி, உதயகுமார், கேயார், வைரமுத்து, சிவகுமார், கலைப்புலி எஸ்.தாணு, அமைச்சர்கள் விஜய பாஸ்கர், கடம்பூர் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் கலந்து கொண்டு ரஜினி பேசியதாவது: கலைஞானத்துக்கு பாரதிராஜா விழா எடுத்து உள்ளார். என்னை தலைவரே என்று தான் பாரதிராஜா எப்போதும் அழைப்பார். அது எனது ரசிகர்கள் அழைப்பது மாதிரி அல்ல, நட்பால் அழைப்பது. அவருக்கும், எனக்கும் ஆழமான நட்பு உண்டு. கருத்து வேறுபாடும் இருந்தது.

எல்லோராலும் ஒரே மாதிரி யோசிக்க முடியாது. கருத்து உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அதை தாண்டி எங்களுக்குள் நட்பு உள்ளது. பணம், புகழ் சம்பாதிக்கலாம்.

பழைய நண்பர்களை சம்பாதிக்க முடியாது. என்னை கதாநாயகனாக்கி கலைஞானம் படம் தயாரித்தார். எனக்கு ஹீரோவாகும் எண்ணம் இல்லை. சின்ன சின்ன வில்லன், வேடம் ஒரு சொந்த வீடு, ஒரு ஸ்கூட்டர் போதும் வாழ்க்கையில் ஜாலியாக இருக்கலாம் என்ற எண்ணமே இருந்தது.

அதனால் வில்லனாக நடித்துக்கொண்டு இருந்தேன். ஆனாலும் பைரவி என்ற படத்தலைப்புக்காகவே அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டேன். காரணம் நான் பார்த்த முதல் படம் பாதாள பைரவி. அபூர்வ ராகங்கள் படத்தில் நான் பேசிய முதல் வசனம் பைரவி வீடு இதுதானே.

சினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். நாடக காலத்தில் புராணங்கள் நாடகங்களாக போடப்பட்டதால் கதாசிரியர்களுக்கு மரியாதை இல்லை. சினிமா வந்த பிறகு புராண படங்களும், சரித்திர படங்களும் வந்ததால் கதாசிரியர்களுக்கு மரியாதை இல்லை. வசனகர்த்தாக்களுக்குதான் மரியாதை இருந்தது.

சமூக கதைகளை படமாக்கிய பிறகும் அந்த வழக்கமே தொடர்ந்து விட்டது. சினிமா படங்களில் டைரக்டர், தயாரிப்பாளருக்கு அடுத்தபடியாக கதாசிரியர் பெயரை இடம் பெற வைக்க வேண்டும். அதாவது டைட்டில் கார்டின் இறுதியில் வருகிற வகையில் அவர்கள் பெயரை குறிப்பிட வேண்டும். மலைக்கள்ளன், சந்திரலேகா, நான் நடித்த பாட்ஷா உள்ளிட்ட பெரிய படங்களின் கதாசிரியர்கள் யார் என்றே தெரியாது.

அந்த நிலைமைகள் மாற வேண்டும். கலைஞானம் வாடகை வீட்டில் குடியிருப்பதாக சொன்னார்கள். சத்தியமாக எனக்குத் தெரியாது. அவருக்கு அரசு சார்பில் வீடு வழங்க ஆவண செய்வதாக அமைச்சர் இங்கே பேசினார்.

நான் அந்த வாய்ப்பை அரசுக்கு கொடுக்க மாட்டேன். கடைசி மூச்சு வரை என் வீட்டில் தான் அவர் வாழ வேண்டும். கலைஞானம் வசிப்பதற்குரிய வீட்டை உடனடியாக பாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.