காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்

711

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நாளை மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற உள்ளதாக கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 21-ந் தேதி(நாளை) தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடக்கிறது. இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழக காங்கிரஸ் கட்சி வடசென்னை, தென்சென்னை, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு மாவட்டங்கள் சார்பில் சென்னையில் நடைபெறும் நினைவுநாள் நிகழ்ச்சியில் நானும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர்கள் சஞ்சய்தத், சிரிவல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், எம்.கிரு‌‌ஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்பார்கள்.

மாவட்டங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், தமிழக காங்கிரஸ் சிறப்பு பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கிறார்கள்.

அதன்படி திருச்சியில் ப.சிதம்பரம், மதுரையில் கே.ஆர்.ராமசாமி, வேலூரில் கே.வி.தங்கபாலு, தேனியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காஞ்சிபுரத்தில் சு.திருநாவுக்கரசர், கன்னியாகுமரியில் எச்.வசந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.