கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் ஊசி..! மருத்துவர் மற்றும் செவிலியர் இடைநீக்கம்..!

400

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண்ணின் வயிற்றில் ஊசி வைத்து தைத்த குற்றச்சாட்டில், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியரை இடைநீக்கம் செய்து துணை இயக்குநர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

உச்சிப்புளி அடுத்த மரவெட்டி வலசை பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி ரம்யாவுக்கு கடந்த 19ஆம் தேதி, உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, ரம்யாவுக்கு தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டு, அவர் கடும் அவதியடைந்து வந்துள்ளார்.

பின்னர், வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது அடிவயிற்று பகுதியில் ஊசியின் உடைந்த பாகம் இருந்தது, தெரியவந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ரம்யாவை ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரம்யாவின் வயிற்றினுள் இருந்த ஊசியை மருத்துவ குழுவினர் அகற்றினர். இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் பத்பா தலைமையிலான குழுவினருக்கு, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் குமரகுருபரன் உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே மருத்துவர் முகமது ஜாஸிர், செவிலியர் அன்புலெட்சுமி ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து இணை இயக்குநர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.