நீதித்துறையை ஒடுக்குகிறது அரசு? – தலைமை நீதிபதி ஆதங்கம்..!

911

புதுடில்லி:”நீதிமன்றங்களின் சுதந்திரத்தை பறிக்க முயலும் சக்திகளை எதிர்கொள்ளும் வகையில், நீதி அமைப்புகள் உறுதியுடன் செயல்பட வேண்டும் ” என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் கூறினார்.

எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின், தலைமை நீதிபதிகளின் மாநாடு, ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்தது. இதில் பங்கேற்ற, நமது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், பேசியதாவது:

சில நேரங்களில், அரசுகள் அல்லது அதிகாரி கள், மக்களை கவருவதற்காக, அரசியல் சாசனம் நிர்ணயித்துள்ள கடமையை மீறும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற அமைப்புகள், அரசியல் சாசனத்தை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டிய கடமை, நீதித் துறைக்கு உள்ளது.

இது போன்ற ஜனரஞ்சக அமைப்புகள், மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்கக்கூடாது. அவர்களிடம் இருந்து, மக்களையும், அரசியல் சாசனத்தையும் காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பு, நீதித் துறைக்கு உள்ளது.அரசியல் அமைப்புகளால் நெருக்கடி வருவதும், அதற்கு பணிந்து போவதும் சில நாடுகளில் நடந்துள்ளதை நாம் கண்டுள்ளோம்.

இந்த இடத்தில்தான், நீதித்துறையின் சுதந்திரம் என்ற பேச்சு வருகிறது.இப்போதும், உலகெங்கும் மக்களுக்கு உள்ள இறுதி வாய்ப்பாக, நீதிமன்றங்கள் உள்ளன.

நீதித் துறை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். நமக்கு நியாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.அதனால், நீதி மன்றங்கள், இதுபோன்ற அரசியல் அமைப்புகளின் நெருக்கடிக்கு பணியாமல், அரசியல் சாசனத்தை காப்பாற்றும் வகையில்,சுதந்திரமாக செயல்படவேண்டும்.

இந்த சுதந்திரம் என்பது, ஒருமுறை அளிக்கக் கூடிய மருந்து கிடையாது. அது தொடர்ந்து இருக்க வேண்டிய நடைமுறை. அரசுகள், அதிகாரிகள், அரசியல் கட்சிகளுக்கு அடிபணியாமல், நீதித் துறையின் சுதந்திரத்தை நசுக்க முயலும் அவர்களுடைய முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.

தனக்குள்ள சுதந்திரத்தை உணர்ந்து நீதிமன்றங் கள் செயல்பட வேண்டும். அந்த சுதந்திரம், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.தன்னை வலுவான அமைப்பாக, நீதிமன்றங்கள் உருவாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of