இளைஞர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே அவர்களின் மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும்

394

இளைஞர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே அவர்களின் மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு கொண்டாட்டம் கோவை குமரகுரு கல்லூரியில் நேற்று நடைபெற்றது. சென்னை விவேகானந்தர் மடம் நடத்திய இந்த விழாவில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகியும் இன்னும் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருவதாக தெரிவித்தார். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மூலம் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்க அரசு பயிற்சி அளித்து வருகிறது எனவும், நாடு முழுவதும் 5 ஆயிரம் பள்ளிகளில் திறன் வளர்க்கும் அடல் டிங்கர் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும் எனவும் மோடி தெரிவித்தார்.

மத்திய அரசின் முத்ரா திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக பயன்படுத்தி உள்ளதாக பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இதேபோன்று நாடு முழுவதும் உள்ள சமூகநல பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களிடம் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சமூக நல பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை வரும் அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரும் 23 ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் கூறினார்.