தமிழகத்திற்கு ரெட் அலார்ட் – முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை

876

தமிழகத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 36 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக முதலமைச்சர்  பழனிசாமி இன்றும், நாளையும், ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனையில் அமைச்சர்கள் மற்றும் 32 மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இயற்கை சீற்றங்களால் அதிகமாக பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தில், ஆட்சியர் அன்புசெல்வன் ஆய்வு மேற்கொண்டார். நீர் நிலைகள் மற்றும் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோன்று தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தஞ்சை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மழையால் அதிகமாக பாதிக்கப்படும் இடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement