ஒரு கோடி மதிப்பிலான செம்மரம் கடத்த முயன்ற ஐந்து பேர் கைது

346

ஒரு கோடி மதிப்பிலான செம்மரம் கடத்த முயன்ற ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், உள்ள ரங்கம் பேட்டை வனப்பகுதியில் செம்மரம் கடத்தப்படுவதாக, செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் நேற்று இரவு செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை சுமார் ஒருகோடி மதிப்பிலான இரண்டு டன் எடை கொண்ட , 58 செம்மரக்கட்டைகள் மற்றும் மருந்துப்பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் தப்பி ஓட முயன்ற கடத்தல்காரர்களை பிடிக்க வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி கடத்தல் கும்பலை பிடித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த முன்னாள் வனக்காப்பாளர் கேசவா, மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.