தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு

445

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு தற்போது வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.

இது மேலும் வலுவடைந்து, புயலாக மாறி, வடதமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும். இதனால் தமிழகத்தில் ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார்.கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வியாழக்கிழமை காலை உருவானது.

இது பிற்பகலில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலைக்கொண்டது. இது வெள்ளிக்கிழமை மேலும் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, வரும் சனிக்கிழமை (ஏப்.27) புயலாக மாறி , தென் மேற்கு வங்கக்கடல் அதையொட்டிய இந்திய கடலில் மையம் கொள்ளும்.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் கடற்கரை அருகில் மையம் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோரத்தில் பெரும்பாலான இடங்களில் வரும் 30-ஆம் தேதியும், மே 1-ஆம் தேதியும் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் பாலச்சந்திரன். இந்திய வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகத்தில் ஏப்ரல் 30, மே 1 தேதிகளில் பலத்த மழை பெய்வது தொடர்பாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இரு நாள்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் மிக பலத்த மழை (120 மி.மீ. முதல் 200 மி.மீ.) முதல் மிகமிக பலத்த மழை வரை பெய்யக் கூடும் (200 மி.மீ.க்கு மேல்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of