லஞ்சப் புகாரில் கைதான வட்டார போக்குவரத்து ஆய்வாளர் – 13 கிலோ தங்கம் பறிமுதல்

488
babu

லஞ்ச புகாரில் சிக்கிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் இரண்டு வங்கி லாக்கரில் இருந்து 13 கிலோ தங்கம், ஏராளமான வெள்ளி பொருட்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாகனத் தகுதிச் சான்றிதழ் வழங்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபு மற்றும் அவரது உதவியாளர் செந்தில் குமார் ஆகியோர் கடந்த மாதம் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

பாபுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய சோதனையில் 200 சவரன் தங்க நகைகள் 35 லட்சம் ரூபாய் மற்றும் வங்கி லாக்கர்களின் சாவிகள் சிக்கின. கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூரில் உள்ள பாபுவின் இரண்டு வங்கி லாக்கரில் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைதொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு கடலூரில் உள்ள மேலும் இரண்டு வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில் சொத்து ஆவணங்கள் மற்றும் அரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் திருப்பாதியிப்புலியூரில் உள்ள வங்கி லாக்கர்களில் இருந்து 13 கிலோ தங்கம், ஏராளமான வெள்ளி பொருட்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.