வாட்ஸ் அப்பில் பரவும் வதந்தி : கிராமப் புறங்களில் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுக்கும் கடைகள்

847

வாட்ஸ் அப் மூலம் பரவும் வதந்தியால் கிராமப் புறங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கடைகளில் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி  500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த திட்டம் வெற்றியடையவில்லை என்றே பல தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி முற்றிலும் நிறுத்தியது. இதனால், மக்களிடையே 2000 நோட்டை புழங்குவது குறையும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். தற்போது, ஏ.டி.எம்.களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் குறைவாகவே கிடைக்கிறது. இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டை, 2020 ஜனவரி முதல் மாற்ற முடியாது என்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த தகவல்கள் வைரலாக பரவும் நிலையில், கிராமப் புறங்களில் தற்போது 2000 ரூபாய் நோட்டை கடைகளில் வாங்க மறுக்கின்றனர். இதனால், பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சடிப்பது குறைந்தது உண்மைதான். ஆனால், ஜனவரி முதல் அதனை மாற்ற முடியாது என்பதில் உண்மை இல்லை என வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பொய்யான தகவல்களை நம்பி, வீணாக மக்கள் பதற்றமோ, அச்சமோ அடையத் தேவை இல்லை என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement